கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக ஏற்காட்டிற்கு வருவது வழக்கம். மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி ஏற்காட்டில் வெகு விமரிசையாக நடத்தப்படும்.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் கோடை விழா மலர் கண்காட்சியில், பல்வேறு கலாச்சார நடன நிகழ்ச்சிகளும், ஏற்காடு ஏரியில் படகு போட்டியும், செல்லப்பிராணிகள் கண்காட்சியும் நடைபெறும்.
மேலும் ஏற்காடு அண்ணா பூங்காவில் பல ஆயிரம் மலர்களைக் கொண்டு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்ட காட்சி அரங்குகள் சுற்றுலாப் பயணிகளுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கோடை விழா மலர் கண்காட்சியின்போது லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிவார்கள்.