சேலம்: 9, 11ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை இல்லை என்று மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு என அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி நேற்று (ஜுன்14) முதல் 9ஆம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவார்கள் என மாநில பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதில், முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
மாணவர் சேர்க்கை குறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில்,"கரோனா பரவல் தொற்று அதிகமாக இருப்பதால், சேலம் மாவட்டத்திற்குத் தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனவே, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.
இருந்தபோதிலும் மாணவர் சேர்க்கை குறித்து தகவல் தெரியாமல் பள்ளிக்கு வந்த பெற்றோர், மாணவ, மாணவிகளிடம் பெயர்களை எழுதி வாங்கிக் கொள்ள கேட்டு கொண்டுள்ளோம்.
முழு பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர பள்ளிகளை முழுவதும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை