சேலத்தை அடுத்த ஓமலூர் புளியம்பட்டியில் கடந்த மே 19ஆம் தேதி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 2 நாட்டு துப்பாக்கிகள், வெடிமருந்து, முகமூடிகள் ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், சேலம் கிச்சிபாளையம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நவீன் (25) என்பதும், செவ்வாய்பேட்டை மரமண்டி ஜம்புலிங்கம் தெருவைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் (24) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ஓமலூர் போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், பொறியியல் பட்டதாரிகளான இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது நாட்டம் கொண்டவர்கள் என்பதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போன்று புதிய இயக்கத்தைத் தொடங்கி ஆயுதப் போராட்டம் நடத்திட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதற்காக செட்டிசாவடி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஏ.கபிலர் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆயுத சட்டம் 1959 மற்றும் வெடிபொருள் சட்டம் 1908 ஆகிய பிரிவுகளின் கீழ் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.