சேலம்:காடையாம்பட்டி அருகே மரக்கோட்டை ஊராட்சியில் வசிக்கும் மாரிமுத்து மகன் அஜித்வேலும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் மாணிக்கம் மகள் பூர்ணிமாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இருவரின் காதல் விவகாரம் பூர்ணிமாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர் பூர்ணிமாவை சமரசம் செய்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அவரின் அத்தை மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதையறிந்த காதலன் அஜித் வேல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் காதலி பூர்ணிமா தனது காதலன் தற்கொலைக்கு முயன்ற காரணத்தால் அவர் மீது உள்ள காதலால், தனது கணவருடன் தினமும் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து காதலன் அஜித்வேல் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் நேற்று இரவு தங்களது வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்த தகவலை அறிந்த பெண் வீட்டார் ஆத்திரத்தில் இன்று அதிகாலை காதலனின் வீடுகளையும் அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த சரக்கு வாகனம், குடிநீர் டேங்க் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.