சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் கரோனா தொற்று நோய் தடுப்புப்பணியாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் மற்றும் தொற்று நோய் பரவுவதைத் தவிர்க்கும் வகையிலும், தினந்தோறும் மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் வீடு வீடாகச் சென்று மருந்துகள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் 80 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி எல்லைப் பகுதி மற்றும் மாநகரப் பகுதிகளுக்குள் காவல் துறையினரின் சார்பில் 18-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெளி மாநிலங்கள் / பிற மாவட்டங்களிலிருந்து வருகை தரக்கூடியவர்கள் மற்றும் மாநகரப் பகுதியினை வசிப்பிடமாகக் கொண்டு, பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து, கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகள், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.