கோவிட்-19 சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான நடமாடும் 32 சிறப்பு மருத்துவக் குழு வாகனங்களின் தொடங்கி நிகழ்வு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச.7) நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சேலம் ஆட்சியர் சி.அ.ராமன், நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக சேலம் ஆட்சியர் சி.அ.ராமன் கூறுகையில், “சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பு முகாம்கள், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்வதற்காக 32 நடமாடும் சிறப்பு மருத்துவ குழு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.சிறப்பு முகாம்கள் நடத்துவதற்காக 20 நடமாடும் மருத்துவ குழுக்கள், 10 தொற்று நோய் தடுப்புக்குழுக்கள் மற்றும் 2 புகைமருந்து அடிக்கும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதிகமான பாதிப்பைக் கொண்ட 60 பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றது. இந்த முகாம்களில் காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. தொற்றுநோய் தடுப்பு குழுக்கள் மூலம் தண்ணீரினால் பரவும் நோய்கள் மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க, குளோரினேஷன் செய்தல், புகைமருந்து அடித்தல், கிருமிநாசினி தெளித்தல், காய்ச்சல் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.