தேசிய மாணவர் படை குழு கமாண்டர் ஆய்வு - தேசிய மாணவர் படை குழு
சேலம்: தேசிய மாணவர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி உள்ளிட்ட படைக்கருவிகளை தேசிய மாணவர் படை குழு கமாண்டர் கர்னல் எல்.சி.எஸ். நாயுடு ஆய்வு மேற்கொண்டார்.
தேசிய மாணவர் படை அலுவலகத்தில் ஆண்டுதோறும் ஆய்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (ஜூன் 16) சேலம் அழகாபுரம் பகுதியிலுள்ள தமிழ்நாடு தேசிய மாணவர் படை அலுவலகத்தில் தேசிய மாணவர் படை குழு கமாண்டர் கர்னல் எல்.சி.எஸ். நாயுடு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, தேசிய மாணவர் படை மாணவர்கள் ராணுவ மரியாதை அளித்தனர். அதை ஏற்றுக் கொண்ட கர்னல், தேசிய மாணவர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி உள்ளிட்ட படைக்கருவிகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வானூர்தி படை அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், தேசிய மாணவர் படை ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்களின் பணி முறை, மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்த அவர், முழுமையாக மாணவர்களிடம் பயிற்சிகளை கொண்டுசேர்க்கும் படி அறிவுறுத்தினார்.
அதற்கான முழு ஒத்துழைப்பை தேசிய மாணவர் படை குழு வழங்குமெனவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கர்னல் தாமஸ், கர்னல் சமீர் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.