மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் வண்டல் மண் தூர்வாரும் பணியில் வண்டல் மண் அள்ளுவதற்கு பதிலாக செம்மண் மற்றும் மணல் அள்ளப்பட்டுவருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மணல் திருட்டு: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி புகார்!
சேலம்: மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியில் வண்டல் மண் தூர்வாரும் பணியில், வண்டல் மண்ணுக்கு பதிலாக செம்மண் அள்ளப்படுவதை தடுக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துலட்சுமி, ’மேட்டூர் அணையை தூர்வார விவசாயிகள் வண்டல் மண்ணை அள்ளி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் நீர்த்தேக்கப் பகுதிகளில் வண்டல் மண்ணை அள்ளாமல் மணல் மற்றும் செம்மண்ணை கூடுதலாக வெட்டி எடுத்து வெளி மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகளுக்கு அதிக விலைக்கு விற்கிறார்கள். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆய்வு மேற்கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
மேலும் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.