சேலம்: பண மோசடி புகாரில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளராக இருந்தவர் மணி. இவர் தனக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
குறிப்பாகக் கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் பணம் பெற்றதாகவும். ஆனால் வேலை வாங்கித் தராமலும் பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் மோசடியில் ஈடுபட்டதாகத் தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துணை கண்காணிப்பாளர் இளமுருகன், தலைமையில் தனிப்படை அமைத்து மணியை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே மோசடி புகாரில் சிக்கிய மணி தலைமறைவாகி முன்பிணை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அவரது முன்பிணை மனு தள்ளுபடி ஆன நிலையில் தனிப்படை காவலர்கள் மணியை தீவிரமாகத் தேடி வந்தனர்.