உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று கடந்த 30 நாள்களாக இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட பரவல் நிலையை அடைந்திருக்கும் வைரஸ் தொற்றால் இதுவரை 12 பேர் உயிரிழந்தனர். 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முனைப்போடு செயலாற்றி வருகின்றன. காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வி துறை என அனைத்து துறைகளும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று நோய் அறிகுறி தென்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள பகுதிகள், சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, துப்புரவு செய்வது போன்ற முன்னெடுப்புகளில் தமது உயிரையும் பொருட்படுத்தாது தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.