சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள சூரியூர் மலை கிராமத்தில் மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருவதாக கூறி மாவட்ட வனத்துறை மலைவாழ் மக்களை காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதைக் கண்டித்து சூரியூர் மலைவாழ் மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறை அலுவலர்களின் செயலை கண்டித்ததோடு, மலைவாழ் மக்களுக்கு அவர்கள் வசித்த பகுதியிலேயே நிலம் வழங்க உத்தரவிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் பேட்டி இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தலைமையில் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் கூறுகையில், "வனத்துறை அத்துமீறி பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்த சூரியூர் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்தியதை கண்டித்து திமுக சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருக்கிறோம்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு கட்ட போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி