சேலம் வின்சென்ட் பகுதியில் அரசுக்கு சொந்தமான தன்னாட்சிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கூடுதல் கட்டடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று கல்லூரியில் 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் கையேடு வழங்கப்பட்டது. அதில் கட்டடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்ததாக அச்சிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையறிந்த கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் மாணவர் கையேட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜாவுக்கு பதில் ஹெச். ராஜா என தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதாகவும், பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா கல்லூரிக்கு எந்த நிதியும் வழங்கவில்லை எனவும் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கல்லூரி முதல்வரின் மறுப்பு கடிதம் மேலும், கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்கள் மத்தியில் பாஜகவை திணிப்பதற்காகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:திருக்குறளுக்கு புதிய விளக்கம் கொடுத்த ஹெச். ராஜா ட்வீட்டால் சர்ச்சை!