சேலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்துக்கு சேலம் சின்னதிருப்பதி கிளை தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘தற்போது வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் நமது பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் காட்சிகளை வசனங்களை வேண்டுமென்றே திரைக்கதைகளில் திணித்து மக்கள் மத்தியில் நம்மை பற்றி தவறான எண்ணங்களை உருவாக்குகிறார்கள். இதனை நாம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதனைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களில் பிராமண சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களுக்கு வருடம்தோறும் இலவச மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும், சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசால் தொடங்கப்பட்ட மேம்பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.