Salem: லாட்டரி விற்பனையைத் தடுத்த நபர் மீது தாக்குதல் - மறியல் செய்த 100க்கும் மேற்பட்டோர் கைது சேலம்: தமிழ்நாடு முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே லாட்டரி விற்பனையானது கொடிகட்டி பறக்கிறது.
இந்த நிலையில் சேலம் மாநகரில் கருங்கல்பட்டி, களரம்பட்டி ஆகியப் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள், தேநீர் கடைகளில் எவ்வித அச்சமும் இன்றி நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் பெரியசாமி கடந்த வாரம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும் சேலம் மாநகரில் சட்டவிரோத மது மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்கப் பல்வேறு போராட்டங்களையும் இவர் முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று, பெரியசாமி தனது கனரக வாகனத்தில் எம்.சாண்ட் மண் ஏற்றிக்கொண்டு தாதகாப்பட்டி பகுதி வழியாக சென்ற போது, அவரை வழிமறித்த நம்பர் லாட்டரி விற்பனையாளர்கள் அருண், சதீஷ் உள்ளிட்டோர் இரும்புக்கம்பியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் அவரின் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி ரத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான பெரிய சாமியின் உறவினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதல் நடத்திய சதீஷ் உள்ளிட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; சேலம் மாவட்டத்தில் நம்பர் லாட்டரி விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மறியல் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
ஆனால், அனைவரும் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்ய முற்பட்டனர். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல் துறையினரின் கைகளை உதறிவிட்டு அனைவரும் மீண்டும் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர், ஒருவர் ஒருவராக குண்டுகட்டாக தூக்கிச் சென்றும், தரதரவென இழுத்துச் சென்றும் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரையும் காவல் துறையினர் மிரட்டி கைகளைப் பிடித்து இழுத்துச்சென்றனர்.
இதனால் சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சிறிது நேரம் கலவர பூமியாக காட்சி அளித்தது.
கைது செய்யப்பட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாவட்டச்செயலாளர் பெரியசாமியின் உறவினர்கள் அனைவரையும் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல் துறையினர் அடைத்தனர்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் லாட்டரி விற்பனை; இடதுசாரி அமைப்பினர் மீது கொலைவெறித் தாக்குதல்... நடந்தது என்ன?