தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: அதிமுக எம்எல்ஏ., மீது குற்றச்சாட்டு

சேலம்: விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

women_petition
women_petition

By

Published : Dec 21, 2020, 6:38 PM IST

தமிழ்நாட்டின் அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் சேலத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், ஒருதலைப்பட்சமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆடுகள் வழங்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம் அடுத்த அக்ரஹார நாட்டார்மங்கலம் பகுதியில் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி 218 பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் சித்ரா, ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, துணைத்தலைவர் சேட்டு, கால்நடை மருத்துவர் ரஞ்சனி தேவி ஆகிய 4 பேரின் உறவினர்களுக்கு மட்டுமே ஆடுகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தவிர பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்களுக்கும் விலையில்லா ஆடுகள் வழங்கியுள்ளனர் என அக்ரஹார நாட்டார்மங்கலம் கிராமவாசிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

இது தொடர்பாக அக்ரஹார நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேள்வி எழுப்பிய பெண்களை, அவர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் விரக்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மண்டல கால்நடை இணை இயக்குநர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கால்நடை துறை அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்.

இது தொடர்பாக புகார் கொடுத்த பெண்கள் கூறும்போது, தமிழ்நாடு அரசு தலையிட்டு தங்களை போன்ற ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க உதவவேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடைமுறைப்படுத்திய இத்திட்டத்தில் நாங்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திமுக ஊராட்சி தலைவர் மிரட்டல்: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபர்

ABOUT THE AUTHOR

...view details