சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் படுக்கை வசதி கிடைக்காமலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையான அவதிக்குள்ளாகி, நாள்தோறும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (மே15) சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் உள்ளிட்ட மருத்துவர்களிடம் தற்போதைய நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், சிகிச்சைக்காக நீண்ட வரிசையில், அவசர ஊர்தி, ஆட்டோக்களில் காத்துக்கிடக்கும் நோயாளிகளின் நிலை குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து, உடனடியாக படுக்கைகளின்றி வெளியே காத்து இருக்கும் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுத்து சிகிச்சையளிக்கும்படி மருத்துவர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.