தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னைப் பற்றியே பேசுகிறார்.. உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன? - latest news

Minister Udhayanithi Stalin Speech in Salem: இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்று, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றி, மோடி தன் சொல்லைக் காப்பாற்றி விட்டார் என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 12:25 PM IST

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சேலம்: திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு, சேலத்தில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்டம் வாரியாக ‘இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்’ நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மைதானத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

மாநாட்டிற்கான முன்னோட்டம்:இந்தக் கூட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெறச் செய்கின்ற பொறுப்பு வேறு எந்த மாவட்டத்தையும் விட, சேலம் மாவட்டத்திற்கு அதிகம் உண்டு என்பதை இளைஞரணியினர் உணர வேண்டும். இது வெறும் செயல்வீரர்கள் கூட்டம் மட்டுமல்ல, மாநாட்டிற்கான முன்னோட்டம் ஆகும்.

இளைஞரணியினர் உழைத்தால் முன்னேறலாம்:இளைஞரணியின் வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே 1980-இல் முதல் முறையாக ஒரு இயக்கத்திற்கு இளைஞரணி என தொடங்கியது. அதைத் தொடங்கி வைத்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். திமுகவில் பல்வேறு சார்பு அணிகள் இருந்த போதிலும், அதில் முதன்மையானது இளைஞரணி என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல முறை பாராட்டி உள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின், இளைஞரணி செயலாளராக இருந்துதான் இப்போது முதலமைச்சராக ஆகியிருக்கிறார். இளைஞரணி மன்றத்தைத் தொடங்கி படிப்படியாக உயர்ந்து, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கு காரணம் அவரது உழைப்புதான். ஆகவே, இளைஞரணியினர் உழைத்தால் நிச்சயமாக முன்னேறலாம். உழைத்தால் யார் வேண்டுமென்றாலும் முன்னேறலாம் என்பதற்கு இளைஞர் அணியே சாட்சி.

உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என பாராட்டப்பட்டவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது 14 வயதில் 1967-இல் இளைஞரணி மன்றத்தை முடி திருத்தும் கடையில் தொடங்கினார். அதன் பின்னர், 1968-இல் சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக சைக்கிள் பிரசாரம், 1969-இல் சென்னை மாவட்ட வார்டு பிரதிநிதி, 1973-இல் திமுக பொதுக்குழு உறுப்பினர், 1976-இல் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றவர்.

1980ஆம் ஆண்டு திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் துறை அமைச்சர், செயல் தலைவர், கட்சியின் தலைவர் என்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடின உழைப்பின் மூலம் தமிழகத்தின் முதலமைச்சராகி உள்ளார்.

மோடி சொல்லை காப்பாற்றிவிட்டார்: பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது. 2014-இல் தேர்தல் பிரசாரத்தில் மோடி 2023ஆம் ஆண்டின் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் காட்டுவேன் என்று ஒரு வாக்குறுதி கொடுத்தார். இப்போது மீண்டும் 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் காட்டுவேன் என்று சொல்கிறார். ஒரு விஷயத்தில் மட்டும் பிரதமரை பாராட்டிட வேண்டும். இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்றார். அதன்படி, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றிவிட்டார். தன்னுடைய சொல்லை காப்பாற்றி விட்டேன் என்றும் சொல்கிறார்.

மத்திய கணக்கு தணிக்கை துறை பணியிட மாற்றம்: மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை வெளி வந்துள்ளது. அதில் 7.50 ரூபாய் லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை எனவும், மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு பணம் வழங்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு பதில் எதுவும் சொல்லாமல், மத்திய கணக்கு தணிக்கைத் துறையில் அறிக்கை தயாரித்த அனைவரையும் பணியிட மாற்றம் செய்துள்ளது.

இதுவரை 30 லட்சம் கையெழுத்து: தமிழகத்தில் கல்வி மற்றும் நிதியுரிமை என விட்டுக் கொடுத்த மாநில உரிமைகளை மீட்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். எப்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறதோ, அப்போதுதான் போராட்டமும் ஓயும். நீட் (Neet) தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. இதுவரை 30 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள கையெழுத்தை பெற்று, மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்போம்.

இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: தமிழகத்தில் இருந்து வரி வருவாயாக மத்திய அரசுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில், 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே திருப்பி தரப்பட்டுள்ளது. ஆனால், உத்தரபிரதேசத்தில் 3 லட்சம் கோடி வருவாய் சென்றுள்ள நிலையில், 9 லட்சம் கோடி ரூபாய் அந்த மாநிலத்திற்கு திருப்பிக் கொடுத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல், முக்கியமான தேர்தல் ஆகும். இதில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

வெற்றி மாநாடாக மாற்றி காட்ட வேண்டும்: தமிழகத்தில் தொடர்ந்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னைப் பற்றியே பேசி வருகிறார். சேலம் இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி காட்ட வேண்டும். சட்டப்பேரவைத் மன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ, அது போல நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில், மாநாட்டு நிதியாக ரூபாய் 24.15 லட்சம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக எம்.பி பார்த்திபன், எம்.எல்.ஏ ராஜேந்திரன், சேலம் மேற்கு மற்றும் கணக்கு மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"ஆடு நனைகிறது என ஓநாய் கவலைப்பட வேண்டாம்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ABOUT THE AUTHOR

...view details