தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டால் சார் ஆட்சியர் மிரட்டுகிறார்: அமைச்சர் முன்னிலையில் மருத்துவர் கண்ணீர் - Salem district news

சேலம் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தால், சார் ஆட்சியர் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து மிரட்டல் விடுக்கிறார் என மருத்துவர் ஒருவர் கண்ணீர் மல்க அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

minister-senthil-balaji-meets-with-doctors
ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டால் சார் ஆட்சியர் மிரட்டுகிறார்: அமைச்சர் முன்னிலையில் மருத்துவர் கண்ணீர் புகார்

By

Published : May 17, 2021, 10:24 PM IST

சேலம்:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் இன்று மாலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், மாவட்ட வருவாய் அலுவலர், மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள குறைகள் மருத்துவமனைகளின் தேவைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, மருத்துவர் ஜெயராமன் பேசுகையில், "எனது மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆகிறது. அது தொடர்பாக ஆட்சியரிடம் பேசினால் சார் ஆட்சியரிடம் பேசுமாறு கூறிவிட்டார். அவரைத் தொடர்பு கொண்டதற்கு நான் நேரில் வருகிறேன் என்று கூறி மருத்துவமனைக்கு வந்து என்னை மிரட்டி நொந்து போகச் செய்து விட்டார்.

அமைச்சர் முன்னிலையில் மருத்துவர் கண்ணீர் புகார்
ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் இன்று எத்தனை நோயாளிகள் உயிரிழப்பார்கள் என எனக்குத் தெரியவில்லை. மருத்துவத் துறை சிக்கல்களை வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கையாண்டால் எப்படி நோயாளிகளை காப்பாற்ற முடியும்" என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

உடனே பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மன்னித்துக்கொள்ளுங்கள். இனிமேல் அலுவலர்கள் அதுபோல பேசாதவாறு பார்த்துக்கொள்கிறோம். மருத்துவர்களுக்கு உதவுவதற்காக, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளத்தான் என்னை முதலமைச்சர் அனுப்பியிருக்கிறார். இனிமேல் இதுபோல நடக்காது. சேலம் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு வெகு விரைவில் தீர்க்கப்பட்டு விடும். உங்களின் சேவைக்கு தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அமைச்சர் முன்னிலையில் சரமாரியாக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவித்தது ஆய்வுக் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:சேலம் இரும்பாலை வளாகத்தில் பிரம்மாண்ட கரோனா சிகிச்சை மையம்!

ABOUT THE AUTHOR

...view details