சேலம்:சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலை, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று (ஜூலை 13) மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறுகையில், “தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு உணவகங்களை மேம்படுத்த துறை ரீதியான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி தமிழ்நாடு ஹோட்டல்களை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்காடு படகு இல்லத்தில் இரவு ஒலி, ஒளி அமைப்பு ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல ஏற்காடு படகு இல்லத்தில் மிதவை படகு உணவகம் அமைக்கப்படும்.
அதன் முதற்கட்டமாகச் சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த 2 மாதங்களில் நிறைவு பெறும். அதேபோல உதகை, கோவை, ஏற்காடு ஆகிய இடங்களில் மிதவை படகு உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மலை மாவட்டங்களில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்களால் சாதாரண மக்களால் அனுமதி பெற்று வீடு கட்ட முடியாத நிலை உள்ளது.