சேலம்: ரயில்வே கோட்டத்திற்கு சொந்தமான இடத்தில் நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடக் கோரி தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கோ அல்லது இடத்திற்கோ நிலுவைத் தொகைக்கு அபராத வட்டி விதிக்கப்படுகிறது. அதில் தற்போது 53 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மீதமுள்ள பணத்தைக் கட்டி பயனாளிகள் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் தற்போது 8,000 வீடுகள் விற்காமல் உள்ளது. அதையும் விற்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இனிமேல் வரப் போகின்ற பயனாளிகள் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். மேலும் குடிசை மாற்று வாரியத்தில் வாடகை குடியிருப்புகள் 135 இடங்களில் இருக்கின்றது. இதில் 61 இடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதை இடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் சுயநிதி திட்டத்தின் மூலமாக விற்கப்பட்ட வீடுகளும் பழுதடைந்துள்ளது. தற்போது 12 இடங்களில் அதனை இடித்து கட்டி தரவேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. குடிசை மாற்று வாரியத்தில் இருந்து விற்கப்பட்ட வீடுகளுக்கு தார்மீக பொறுப்பு இல்லை என்றாலும் அவற்றையும் சீரமைத்து தர தமிழக முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்" என்று கூறினார்.
இதையும் படிங்க:ரவுடிகளுக்கு ஆப்பு: "டிராக் கேடி" செயலி தமிழ்நாடு காவல்துறை அறிமுகம்...!