தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழல் என்றால் பாரபட்சமின்றி தண்டனை - அமைச்சர் பி.மூர்த்தி - பி மூர்த்தி

பதிவுத்துறையில் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் சார்பதிவாளர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பத்திரபதிவுத்துறை  சீராய்வுக் கூட்டம்
சேலத்தில் பத்திரபதிவுத்துறை சீராய்வுக் கூட்டம்

By

Published : Jun 22, 2023, 6:52 AM IST

சேலத்தில் பத்திரபதிவுத்துறை சீராய்வுக் கூட்டம்

சேலம்:பதிவுத்துறையில் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் சார்பதிவாளர்கள் தயவு தாட்சண்யமின்றி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை சம்பந்தமான மண்டல அளவிலான சீராய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, “தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பத்திர பதிவுத்துறை அலுவலங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மையை உறுதிபடுத்தும் நோக்கிலும், ஊழலை தடுத்திடும் நோக்கிலும் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பதிவு அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது. மேலும், ஆவணம் எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் பதிவுத்துறை தலைவரால் பல்வேறு சுற்றறிக்கைகளின் வழி அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த சுற்றறிக்கைகளின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் திடீர் ஆய்வுகளின்போது ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் நடமாட்டம் உள்ளதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் உரிம விதிகளின் கீழான விதி 9 மற்றும் 13 (A)இன் படி வழங்கப்படும் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான நிபந்தனை (J)இல் அலுவலக நிமித்தமாக அழைக்கப்பட்டால் தவிர்த்து, அலுவலகத்திற்குள் ஆவணம் சார்பதிவாளரால் எழுதுவோர் நுழையக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அனைத்து மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மண்டல துணை பதிவுத்துறை தலைவர்கள், தங்களது திடீர் ஆய்வுகளின்போது உறுதி செய்திடவும், சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமரும் இடத்தை ஆவணம் எழுதுபவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதனையும் கண்காணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விதிகளை மீறி சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுவோர் மற்றும் இடைத்தரகர்களின் செயல்பாடு மற்றும் நடமாட்டம் ஆகியவை கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிம விதி 1982இன் விதிப்படி 16 மற்றும் சுற்றறிக்கைகளின் கீழ் உரிய தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நடவடிக்கைகள் மட்டுமின்றி விதிமுறைகளை மீறுபவர்களது உரிமம் ரத்து செய்வதோடு, இதனை கண்காணித்திட தவறும் சார்பதிவாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மண்டல துணைத் தலைவர் பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பு.. PST நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு தயங்குவது ஏன்? - அறப்போர் இயக்கம் சரமாரி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details