குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் கீதா ஜீவன் சேலம்: மணக்காடு அரசு தொடக்கப்பள்ளியில் இன்று (ஜனவரி 20) காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மணக்காடு அரசுப் பள்ளியில் காலை உணவு தயாரிக்கப்படும் உணவுக்கூடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் காலை உணவை சுவைத்து உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறி, பள்ளி குழந்தைகளிடம் உணவு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "தமிழ்நாடு அரசின் முழு நிதி உதவியுடன் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேலம் மாநகர் பகுதிகளில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்று ஆய்வு செய்யப்பட்டது. காலை உணவுத் திட்டத்தால் மாணவ, மாணவியரின் கல்வித்திறன் அதிகரித்துள்ளது. படிப்படியாக தமிழ்நாட்டின் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேலத்தில் உள்ள 54 தொடக்கப் பள்ளிகளில் பயின்று வரும் 5,719 பள்ளி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கல்வி திறன் மேம்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் வருகை பதிவும் அதிகரித்துள்ளது. காலை உணவு உண்ணாமல் கல்வி பயிலும் நிலை மாற்றப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், "மாநிலம் முழுவதும் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி என்னும் சர்வாதிகாரி ஒழிய வேண்டும் - புகழேந்தி