சேலம் புதிய பேருந்து நிலையம் அங்கம்மாள் காலனி பகுதியில் வசித்து வந்த 14 குடும்பங்களை மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். ஆனால், குடியிருப்புகளை காலி செய்ய அப்பகுதி மக்கள் மறுத்ததால், அவர்களின் குடிசைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 37 பேர் மீது பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று, 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர்களான வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முருகேசன் உடல்நலக் குறைவு காரணமாக இறந்து விட்ட நிலையில், குற்றம் நிருபிக்கப்படாததால் மீதமுள்ள 35 நபர்களையும் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.