சேலம்:கர்நாடகா வனத்துறையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சேலம் மாவட்டம் கோவிந்தம்பாடியை சேர்ந்த மீனவர் ராஜாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உரிய நியாயம் கிடைக்கும் வரை உடலை பெறப்போவதில்லை என ராஜாவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் தெரிவித்ததால், நேற்று (பிப்.17) பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இன்று (பிப்.18) காலை, மேட்டூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், ராஜாவின் உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ராஜாவின் உறவினர்கள், மேட்டூரில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான், ராஜாவின் உயிரிழப்பு குறித்து உறுதியாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில், மீனவர் ராஜாவின் உறவினர்கள் உடலை பெற மறுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய உரிய நியாயம் வழங்கும் வரை, உடலை பெற மாட்டோம் என கூறினர். இதையடுத்து சேலம் கோட்டாட்சியர் விஷ்ணு வர்த்தினி மற்றும் போலீசார் ராஜாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தம்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா, இளையபெருமாள் உள்ளிட்ட 4 பேர், கடந்த செவ்வாய்க்கிழமை மீன்பிடிப்பதற்காக தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் உள்ள அடிப்பாலாறுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ராஜா உயிரிழந்தார். அவரது உடல் ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்கள் மான் வேட்டையாடியதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, கர்நாடகா வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: vellore tidel park: வேலூர் மினி டைடல் பூங்கா: முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்!