கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை பொறுத்தும், அம்மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவைப் பொறுத்தும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
இந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 11,318 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 8,977 கன அடியாக சரிந்துள்ளது.
மேலும், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியிலிருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், கால்வாய் பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 850 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.51 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 98.63 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 63.08 டிஎம்சி ஆக உள்ளது.
இதனிடையே, டெல்டா விவசாயத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.