கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பியதையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த மூன்று நாள்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து இன்று (செப்.23) வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனையடுத்து அணையின் நீர்மட்டம் நேற்று இருந்ததைவிட இரண்டு அடி அதிகரித்து 96 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
மேலும் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாகப் பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 58.88 டிஎம்சி ஆக உள்ளது.
இதேபோல நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் இன்னும் சில நாள்களில் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.