கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
அந்த தண்ணீர் தமிழ்நாடு-கர்நாடக எல்லை பகுதிகள் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் கடந்த 21ஆம் தேதி முதல் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக தினமும் அதிகரித்து வந்தது. நீர்வரத்தின் காரணமாக அணையின் நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்துகொண்டே இருந்தது. கடந்த 21ஆம் தேதி 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் அதிகரித்து , நேற்று(செப் 25) காலை 99.62 அடியாக இருந்தது.
பின்னர் அணையின் நீர்மட்டம் மதியம் சுமார் 12.30 மணி அளவில் 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையின் 16 கண் மதகுகள் அருகே காவிரி அன்னைக்கு, விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.
இந்த ஆண்டில் தற்போதுதான் முதல் முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இந்த நீர்மட்டம் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி வரை 100 அடியாகவே நீடித்தது குறிப்பிடத்தக்கது.