சேலம்:மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி ஆகும். காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அன்றைய தினம் அணையின் நீர் மட்டம் 96.81 அடியாகவும், நீர் இருப்பு 60.78 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதனால் கடந்த மாதம் 13 ஆம் தேதி (13.10.2021) முதல் பாசன நீர் திறப்பு வினாடிக்கு 100 அடியாக குறைக்கப்பட்டது. நீர் வரத்தைக் காட்டிலும் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் கடந்த 24.10.2021 அன்று அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுவது அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 65ஆவது முறையாகும்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
இந்நிலையில் கர்நாடக அணைகளான கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளது. இதனால் அவ்வணைகளின் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ள அந்த உபரி நீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை நீர் அனைத்தும் மேட்டூர் அணைக்கு வந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் கடந்த 9 ஆம் தேதி (09.11.2021) 119 அடியாக உயர்ந்தது.
அணை நிரம்பும் தருவாயில் நீர்வரத்து அதிகளவு வந்ததால், நீர் திறப்பு வினாடிக்கு 100 கன அடியிலிருந்து 20,000 கன அடியாகவும், பின் படிப்படியாக அதிகரித்து திறந்துவிடப்பட்டது.
120 அடியை எட்டி அணை நிரம்பியது
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (நவ.13) இரவு 11.35 மணிக்கு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியது. அணைக்கு வரும் நீர் வரத்து 24,000 கன அடியில் அணை, சுரங்க மின்நிலையங்கள் வழியாக 20,000 கன அடியும், 16 கண் உபரி நீர் போக்கி வழியாக 2,000 கன அடியும் திறக்கப்பட்டது. நீர் திறப்பைக் கொண்டு அணை, சுரங்க மின் நிலையங்களில் 230 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
41ஆவது முறையாக 120 அடியை எட்டியது
மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியதையடுத்து அணையின் 16 கண் உபரி நீர் போக்கி அருகில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பூஜை செய்தனர். இதில் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியம், உதவி பொறியாளர் அணை பிரிவு மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போது அணை 120 அடியை எட்டி நிரம்புவது மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41ஆவது முறையாகும். இதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (நவ.14) காலை 8.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 25,150 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. 16 கண் உபரி நீர் போக்கியில் வினாடிக்கு 2,500 கன அடியும், சுரங்க மின்நிலையங்கள் வழியாக 22,500 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 150 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் திறப்பைக் கொண்டு அணை, சுரங்க மின் நிலையங்களில் 286 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்