சேலம் :குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103. 35 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து வருவதால், தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67 அடியாக சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்வரும் 15 தினங்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்டா பாசன விவசாயிகள் பெரும் அளவு பாதிக்கப்படுவார்கள், எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர்
தங்கராஜ் தலைமையில், கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு தரவேண்டிய 41 டிஎம்சி தண்ணீரை பெற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.