கடந்த மாதம் 29ம் தேதி கேரள மாநிலம் அட்டப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரளா மற்றும் தமிழ்நாடு கூட்டு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் தற்போது தமிழ்நாட்டின் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறார். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பேசும் அல்லது போராட்டங்கள் நடத்தும் அனைவரையும் தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கிறோம் என கைது, சிறைப்படுத்துதல் போன்ற பல்வகை தண்டனைகளை ஆங்கிலேய அரசு அளித்தது. அதைப் போன்றதொரு நிலை தற்போது நாட்டில் நீடிக்கிறது என்பதே அரசியல் எதார்த்தம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள் .
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஆளும் அரசுக்கு எதிராக மாற்றுக்கருத்து சித்தாந்தங்களைக் கொண்ட அரசியல் இயக்கங்கள் வளர்ந்துவருவது தவிர்க்க இயலாததுதான் என்றாலும் அந்த இயக்கங்களின் கோட்பாடுகளை வென்று எடுக்கக்கூடிய அரசுகள் மத்தியிலும் மாநிலங்களிலும் அமையாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனம் என்பது அரசியல் நோக்கர்களின் ஆழமான கணிப்பு.
யார் இந்த மாவோயிஸ்ட் மணிவாசகம்? தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஜனநாயக அரசியல் கட்சிகளைக் கடந்து இடதுசாரி சித்தாந்தங்களை குறிப்பாக மாவோவின் கொள்கைகளை லட்சியமாகக் கொண்ட அமைப்பு மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் முழு இயக்கமும் காவல்துறைக்கும் அந்தந்தப் பகுதி உளவுத்துறைக்கும் மட்டுமே தெரிந்த செய்தி என்றபோதிலும் மாவோயிஸ்ட் அமைப்பைச் சார்ந்த நபர்கள் எப்போதாவது சுட்டுக் கொல்லப்படும்போது வெளி உலகுக்கு ஒரு செய்தியாக மட்டுமே வெளிவருவது கண்கூடான விஷயம்.
1970களில் நக்சல்பாரி இயக்கம் தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட வீரியமாக வளர்ந்தது. அதன் தாக்கம் தற்போது பெருமளவு குறைந்துவிட்டாலும் சேலம், தருமபுரி , கிருஷ்ணகிரி , கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கிராமப்புறங்களில் மாவோயிஸ்ட் அமைப்புகள் மிக ரகசியமாக இயங்கி வருகிறது என்பது உளவுத்துறை அலுவலர்களின் களநிலவரத் தகவல்.
மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் வீடு ஆளும் அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராட்டங்களை துப்பாக்கிமுனையில் நடத்திட இடதுசாரி தீவிரவாத அமைப்புகள் முனைந்து விடக்கூடும் என்ற மத்திய, மாநில உளவுத்துறை அலுவலர்களின் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து இம்மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு காவல்துறையினரால் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில்தான் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகம் கேரள மாநில வனப்பகுதியில் கடந்த 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்த மணிவாசகம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அரசியல் பணியை செய்து முடித்து இறுதியாக ஆறு வருடங்களுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் இயக்கப் பணியை நடத்தி வந்தார். அப்போதுதான் அவரது மரணம் நிகழ்ந்தது.
சீனாவின் புரட்சிகர அரசியலுக்கு ஆணி வேராகத் திகழ்ந்த மாசேதுங் என்ற மாவோவின் அரசியல் சித்தாந்தங்களை மணிவாசகம்முழுமையாக உள்வாங்கிச் செயல்பட்டு வந்தார். சேலம், தருமபுரி மாவட்டங்களின் எல்லையில் சேர்வராயன் மலைக்குன்றுகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது ராமமூர்த்தி நகர் எனும் கிராமம் . சுமார் 500 வீடுகளைக் கொண்ட இந்த குக்கிராமத்தில் சாதிய பிரிவினைகள் இதுவரையில் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய ஆச்சரியமே. ஆனாலும் அண்மைக்காலமாக ஒரு சில சாதிய அமைப்புகள் தலைதூக்கி இருப்பது வேதனையான விசயம் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். மணிவாசகம்தான் வாழ்ந்த காலம் வரை ராமமூர்த்தி நகர் கிராமப்பகுதியில் சாதிய ரீதியிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதிக்கவில்லை என்று அவர் குறித்த நினைவுகளை ஊர் பெரியவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
கிராமத்தின் கடைக்கோடியில் புதர்மண்டிய நிலையில் பாழடைந்து பூட்டிக்கிடக்கும் கூரைவீடே மணிவாசகத்தின் வீடு என்கிறார்கள் கிராம மக்கள். கூரை வீட்டின் சிறிய கதவில் மணிவாசகத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்ட் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அவர் குறித்து கிராமத்தில் வசிக்கும் அவரின் தங்கை லட்சுமி, அவரின் கணவர் சாலி ஆகிய இருவரிடமும் விசாரித்தோம். 'எங்களிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் அன்பாகவும் மிகவும் சாந்தமாகவும் பேசக்கூடியவர் மணிவாசகம் என்று தனது அண்ணனை குறித்து பேசும் லட்சுமியின் கண்களில் கண்ணீர் ததும்பியது.
தொடர்ந்து பேசிய லட்சுமி ," எங்கள் அப்பா பெயர் முத்து செட்டியார். அம்மா பெயர் ருக்குமணி. என்னுடன் பிறந்தவர்கள் மணிவாசகம் அண்ணனோடு சேர்த்து ஒன்பது பேர் . ஆனால் அவர்களில் 5 பேர் இறந்துவிட்டனர் . அதன்பிறகு இருந்த நால்வரில் நான்தான் கடைக்குட்டி. மூத்த அண்ணன் சுப்பிரமணி ஈரோட்டில் இருக்கிறார். இரண்டாவது அண்ணன்தான் மணிவாசகம் எனக்கு முன்பாக ஒரு அக்கா . அவர் பெயர் சந்திரா. இதில் மணிவாசகம் அண்ணனும் சந்திரா அக்காவும் இடதுசாரி இயக்கத்தில் தீவிர பற்று கொண்டு 30 ஆண்டுகளுக்கு முன்பேஅரசியல் வேலை செய்ய வீட்டைவிட்டு வெளியேறி விட்டனர் . அதன் பிறகு அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை . ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை வீட்டிற்கு வந்த அண்ணன் மணிவாசகம் சில நாள்கள் தங்கி இருந்தார். அதன் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை . இயக்கப் பணிக்காக கைது செய்யப்பட்ட அக்கா சந்திரா திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை எப்போதாவது கடிதம் எழுதுவார் . அந்த கடிதங்கள் தற்போதும் எங்கள் வீட்டில் உள்ளன. வேறு எந்த தொடர்பும் இல்லை. மணிவாசகம் அண்ணன் மெத்தப் படித்தவர். ஆங்கில இலக்கிய புலமை கொண்டவர். தருமபுரி அரசுக் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு, கல்லூரி ஆசிரியர் வேலை வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அதற்கு அலுவலர்கள் லஞ்சம் கேட்டதால் அந்த வேலையை அவர் வேண்டாம் என்று கூறி பெற்றோரேடு எங்கள் குலத்தொழிலான மண்பானைகள் செய்யும் தொழிலில் முழு ஒத்துழைப்போடு ஈடுபட்டார்.
மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மைத்துனர் சாலியின் பேட்டி அப்போதுதான் செம்மணி என்ற இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த நபர் ராமமூர்த்தி நகர் கிராமத்திற்கு வந்து அரசியல் பணி செய்தார். அவருடன் அண்ணன் சேர்ந்து கிராமப்புற மாணவர்களுக்காக தனியார் பள்ளி ஒன்றை கட்டி அதன் மூலம் இருவரும் கல்வி கற்பித்து வந்தனர். அதன் பிறகு சில ஆண்டுகளில் இருவரும் ராமமூர்த்தி நகரில் இருந்து வெளியேறி விட்டனர் . ஆனால் கடந்த திங்கள்கிழமை அண்ணனை போலீசார் சுட்டுக் கொன்று விட்டதாகவும் அவரது உடலை வாங்கிச் செல்லுங்கள் என்றும் எங்களுக்கு செல்போன் மூலம் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நானும் எனது கணவர் சாலியும் திருச்சூர் சென்றோம். அங்கு அவரது உடலை அடையாளம் காட்டினோம் . ஆனால் அவர் என்கவுன்டர் செய்து சாகடிக்கப்பட்டது போல் தெரியவில்லை. ஏற்கனவே அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள் என்று எங்களுக்குச் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவரது உடலை நாங்கள் பெற்றுக் கொள்ள மாட்டோம். யார் இந்த கொலையை செய்தது எதற்காக செய்தார்கள் என்பதை முழுமையாக கேரள தமிழ்நாடு கூட்டு அதிரடிப் படை அலுவலர்கள் எங்களுக்கு விளக்கம் தரும்வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி விட்டு நேற்று இரவு ராமமூர்த்தி நகருக்கு வந்து சேர்ந்தோம். இந்தக் கருத்தில் எங்களுக்கு மாற்றமில்லை. காவல்துறையினர் உண்மையைக் கூறும் வரை நாங்கள் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம்" என்று உறுதியாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட்டுகளை முடக்க முயற்சி!