ஓமலூர் அருகேயுள்ள கோட்டக்கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 31 வயது நிரம்பிய நபர், மேட்டூர் நீதிமன்றத்தில் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சுங்கச்சாவடி அருகே தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சேலம், சூரமங்கலம் அருகேயுள்ள, புதுரோடு பகுதியில் உள்ள வங்கியில் பணியாற்றும் பெண் மேலாளர் ஒருவருக்கு கரோனாத் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு புதன்கிழமை கரோனோத் தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டது.
இதில் கடந்த 21ஆம் தேதி நீதிமன்ற ஊழியர் வங்கிக்கு சென்று வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், சுகாதாரத் துறை அலுவலர்கள் அவரை உடனடியாக தனிமைப்படுத்தி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஓமலூர் சுங்கச்சாவடி அருகே கிருமிநாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேலும் அவருடைய பெற்றோர், அண்ணன் குடும்பத்தினர் என ஏழு பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து நீதிமன்ற ஊழியரின் வீடு அமைந்துள்ள கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், இவர்களது வீடு சுங்கச்சாவடிக்கு அருகில் அமைந்துள்ளதால், சுங்கச்சாவடி முழுமைக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஓமலூர் வட்டார மருத்துவ அலுவலர் ஜெ.ரமணன் தலைமையில், சுகாதாரத் துறை அலுவலர்கள் கோட்டக் கவுண்டம்பட்டியில் முகாமிட்டு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சேலம் - அசாம் இடையே சிறப்பு பார்சல் ரயில்!