சேலம்: சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக். 22) இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள் 700க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்றார்.
அப்போது அவர் கூறுகையில், “ திட்டமிட்டு சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகச் செயற்கை தோற்றத்தை திமுகவினர் ஏற்படுத்தினார்கள். அதெல்லாம் இப்போது பொய்யாகப் போனது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது தமிழகத்தில் மட்டும் தான் சிறுபான்மை மக்களுக்குச் சிறு பாதிப்பு கூட ஏற்படாமல் அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா செயல்பட்டார்.
அதிமுக கொள்கை மற்றும் கூட்டணி என்பது வேறு. அதிமுக கொள்கை என்பது நிலையானது. அதிமுகவிற்குச் சாதி மதம் என்பது கிடையாது. அதிமுகவினர் அனைவரையும் நேசிப்பவர்கள், அவர் அவர் மதம் அவர்களுக்கு புனிதமானது, அதில் யாரும் தலையிட முடியாது. அதிமுக பாஜகவிலிருந்து விலகிய பிறகு தான் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்களைத் தெரிகிறது.
முதலமைச்சருக்குப் பயம்:ஸ்டாலினுக்குப் பயம் வந்துவிட்டது. திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்துவிடுவார்கள் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்குச் சிறு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை, ஏதாவது நல்லது செய்திருந்தால் தான் இஸ்லாமியர்கள் திமுகவில் நீடிப்பார்கள், புனித நோன்புக்கு வழங்கப்பட்ட ரூ 6 கோடி நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டிருந்தது, தகவல் அறிந்தவுடன் அதிமுக அரசு 2 கோடி உயர்த்தி ரூ 8 கோடியாக வழங்கியது .
ஹஜ் பயணத்திற்கு ரூ 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தோம். மக்களோடு மக்களாக இருந்த காரணத்தினால் எந்த மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதை உணர்ந்து நன்மை செய்து வருகிறேன் . அதிமுக இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களைப் போன்று ஸ்டாலின் கூறி வருகிறார்.
திமுக-பாஜக கூட்டணி: 1999ல் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 ஆண்டுக் காலம் பதவி அனுபவித்தனர். முரசொலி மாறன் உடல் நலம் இல்லாமல் இருந்த போதிலும் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். சந்தர்ப்ப சூழல் காரணமாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்டது.