சேலம்: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 31.08.2022 அன்று பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்து சிலர் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சேலம் மாவட்டம் வீரகனூரில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக கைகளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின் ராமசாமி மற்றும் மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான ராணி, மணி உள்ளிட்ட மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.