சேலம்: தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் காலாண்டு வரி உயர்த்தப்பட்டது. இந்த வரி உயர்வு வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மாநிலத் தலைவர் தனராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு அரசு காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், மற்றும் தமிழ்நாட்டில் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற (09.11.2023) அன்று ஒரு நாள் லாரிகள் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும்.
அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் தமிழ்நாட்டில் இயங்காது. எங்களுக்கு ஆதரவாக சிறிய ரக லாரிகள் மற்றும் லாரி சார்ந்த தொழில் செய்யும் அனைவரும் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக 25 லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படாது. அதேபோல கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்படும்.