ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காமல் மதுபிரியர்கள் தள்ளாடிவருகின்றனர். இதனைப் பயன்படுத்தி சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்றுவருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகருக்கு புகார் வந்தது.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர் கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் சோதனைச்சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையிலான காவல் துறையினர் இடையப்பட்டி வில்வனூர் வனப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை நடத்தினார்.
அப்போது, அவர்கள் 15 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்திவந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒருவர் திருப்பூரில் ஆயுதப்படையில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வரும் சேலம் வீராணத்தைச் சேர்ந்த குமரேசன் (25), அவரது நண்பர் கீதன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர், இருசக்கர வாகனத்தையும், கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், மலைப்பகுதியில் நடத்திய சோதனையில், நான்கு பேர் கள்ளச்சாரயம் காய்ச்சிவந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வலசையூர் ரஞ்சித்குமார் (24), சேலம் அழகேசன் (22), அய்யனார் (23), இடையப்பட்டி காந்திராஜன் (32) ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கள்ளச்சாராயம், மூன்று இருசக்கர வாகனங்கள், நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது