கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், ஊரகப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியதை காவல் துறையினர் கண்டறிந்தனர். குறிப்பாக மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள பல கிராமங்களில் ட்ரோன் கேமராக்களை கொண்டு கண்காணித்த காவல் துறையினர், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் சேலம் மாவட்ட அளவில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 165 வழக்குகள் பதிவுசெய்து 60 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு கார்கள் மற்றும் 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆத்தூர், கருமந்துறை, தலைவாசல், ஏத்தாப்பூர் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராய சோதனையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர் .