சேலம்: பெரிய கிருஷ்ணாபுரம் மத்தூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கு சரவணன் சேர்மன் பொறுப்பிலும் செயல்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல், பள்ளி அருகே சரவணனுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் பட்டா நிலம் உள்ளது.
எனவே சரவணன், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பட்டா நிலத்தில் இரும்பு வேலி அமைத்து பாதுகாத்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், சிவகுமார் மற்றும் அய்யன் துரை ஆகியோர் அடி ஆட்களுடன் வந்து, பட்டா நிலத்தில் போடப்பட்டிருந்த வேலியை உடைத்து எறிந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, இதனை தட்டிக் கேட்ட சரவணன் மற்றும் அவரின் குடும்பத்தினரை விஜயகுமார் என்பவர், அடியாட்கள் அடங்கிய கும்பல் ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், இந்த சம்பவம் குறித்து சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அவரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர், சரவணனை மிரட்டி அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதனால் விஜயகுமாரின் அடியாட்கள் நாள்தோறும் சரவணனின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வருவதாக பலமுறை காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்துள்ளார்.