தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குருவிப்பனை ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்: ஏஎல்சி நிர்வாகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் - ஏஎல்சி நிர்வாகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம்

குருவிப்பனை ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுடன் ஏஎல்சி நிர்வாகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

g
g

By

Published : Jul 2, 2021, 7:56 AM IST

சேலம் மாவட்டம் எருமாப்பாளையம் பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் குருவிப்பனை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் ஏஎல்சி என்ற தனியார் நூற்பாலை நிறுவனம், நிலத்தை ஆக்கிரமித்து அதில் சுற்றுச்சுவர் கட்டி உள்ளதென்றும், அதேபோல தனி நபர்கள் சிலர் ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டி உள்ளதாகவும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.

மேலும் தனியார் நூற்பாலை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுகள் ஏரியில் கலப்பதால் ஏரி முழுவதும் பாழாகி அப்பகுதி நிலத்தடி நீர் விஷத்தன்மை உள்ளதாக மாறிவிட்டதாகவும் எருமாப்பாளையம் சுற்றுவட்டார மக்கள் சேலம் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தொடர்ந்து புகார்கள் அளித்தனர்.

ஏஎல்சி நிர்வாகம்

இந்தப் புகார்களின் பேரில் மாவட்ட நிர்வாகமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றும் வகையிலும் சாயக்கழிவு கலக்காமல் இருக்கும் வகையிலும் நடவடிக்கை எடுத்தது. இருந்தபோதும் தனியார் நூற்பாலை நிர்வாகம் கொடுத்த நெருக்கடியால் பணிகள் பாதியிலேயே நின்றன.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி 'ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் குருவிப்பனை ஏரி' என்ற தலைப்பில் நமது ஈடிவி பாரத் சிறப்புச் செய்தி வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது.

கொந்தளிக்கும் பொதுமக்கள்

இந்த நிலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மஹால் ஆக இருந்தாலும் விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக குருவிப்பனை ஏரி ஆக்கிரமிப்புகளை, சேலம் மாவட்ட வருவாய் துறையினர் அகற்ற சென்றனர். அப்போது தனியார் நூற்பாலை நிர்வாகத்தினர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் குருவிப்பனை ஏரி பகுதிக்கு திரண்டு வந்து தனியார் நூற்பாலை நிர்வாகத்தின் மீது அலுவலர்கள் முன்னிலையில் சரமாரி குற்றச்சாட்டு வைத்தனர். ஏரி ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து பேட்டியளித்த எருமாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், மணிமேகலை ஆகியோர் கூறுகையில், "25 ஆண்டுகளாக இந்த ஏரி ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது.

அருகில் இருக்கும் தனியார் நூற்பாலைக்குள் உள்ளேயிருந்து கழிவுநீர் பைப் அமைத்து ஏரியில் கொட்டப்படுகிறது. மேலும் ஏரிக்கு வரும் நீர் வழித்தடமான ஓடையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி உள்ளனர்.

கொந்தளிக்கும் பொதுமக்கள்

அதேபோல் ஏரிக்கரை பகுதியிலும் தனியார் நூற்பாலை நிர்வாகம் சுற்றுச்சுவர் கட்டி உள்ளது. இதனால் இந்த ஆலையால் ஏரி நீர் விஷத்தன்மை உடையதாக மாறிவிட்டது. சென்ற வாரம் ஏரியில் இருந்து ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. சுற்றுவட்டார கிராமங்களுக்கு இந்த ஏரிதான் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்தது. இப்போது இல்லை. நிலத்தடி நீர்மட்டம் விஷமாக மாறி விட்டது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் பலமுறை புகார் அளித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தனியார் நூற்பாலை நிர்வாகம் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றனர்.

எனவே சுற்றுப்புற சூழலுக்கு மாசு விளைவிக்கும் இந்தத் தனியார் நூற்பாலையை குடியிருப்பு பகுதியில் இருந்து அகற்றவேண்டும், ஏரியை பாதுகாத்து இப்பகுதி நிலத்தடி நீரையும் விவசாயத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: வெண்பொங்கல் உண்டு கோயிலைக் காக்கும் பணியில் ஈடுபடும் அதிசய முதலை!

ABOUT THE AUTHOR

...view details