சேலம் மாவட்டத்தில் (2020-21) ஆகிய ஆண்டிற்கான 9.24 கோடி மதிப்பீட்டில், 28 குடிமராத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று(ஆகஸ்ட்.17) பொதுபணித்துறை, நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், புத்திரகவுண்டன்பாளையம் ஏரியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி புனரமைப்பு மேற்கொள்ளும் பணியினை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பிறகு இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி 2020-2021ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநிலக் கோட்டம் சார்பில் 6.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,848.73 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 21 குடிமராமத்து திட்டப் பணிகளுக்கும், பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் மேட்டூர் அணைக் கோட்டம் சார்பில் 2.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 953.86 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 7 குடிமராமத்து திட்டப் பணிகள் என மொத்தம் 9.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,802.59 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 28 குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புத்திரக்கவுண்டன்பாளையம் ஏரி மற்றும் வழிந்தோடி வாய்க்கால் புனரமைக்கும் பணி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இன்றைய தினம் தொடங்கப்பட்டது. மேலும் இதே ஊராட்சி ஒன்றியத்தில் ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள கல்லார் ஏரி மற்றும் நீர் வழங்கு வாய்க்கால் புனரமைக்கும் பணி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெத்தநாயக்கன்பாளையத்தில் அணைக்கட்டு மற்றும் நீர்வழங்கு வாய்க்கால் புனரமைக்கும் பணி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் என மொத்தம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 குடிமராமத்து திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.