சேலம்: கிருஷ்ணகிரி முதல் கோவை வரையில் 294 கி.மீ. நீளத்தில் ரூ.2,187 கோடி மதிப்பில் இயற்கை எரிவாயு குழாய் வழித் திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.2) காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில் இது குறித்து, கெயில் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் மோவர், தலைமை பொது மேலாளர் ஆறுமுகம், வர்த்தகப் பிரிவு பொது மேலாளர் ஜோதிகுமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, "தேசிய எரிவாயு விரிவாக்க நடவடிக்கையாகக் கொச்சி, கூட்டநாடு, பெங்களூரு, மங்களூரு குழாய் வழி திட்டத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணகிரி முதல் கோவை வரையிலான 294 கி.மீ. நீளத்தில் ரூ.2,187 கோடி மதிப்பிலான இயற்கை எரிவாயு குழாய் வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
திருச்சியில் நடைபெறும் பல்வேறு திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து காணொலி வாயிலாகச் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள கொங்கணாபுரம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய அரசு இயற்கை எரிவாயு பங்கை 6.7 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணகிரி முதல் கோவை வரையிலான குழாய் தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் வழியாகச் சென்று தமிழகத்தின் தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணையும்.
இதன் மூலம் உரம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த வழித்தடத்தில் தொழிற்சாலைகள், வாகனங்களுக்கான சி.என்.ஜி. மற்றும் குடியிருப்புகளுக்கான இயற்கை எரிவாயு வழங்கப்படும். மேலும், கரியமில வாயுவைக் குறைப்பதற்கும், இயற்கை எரிவாயுக்கு தடையின்றி கிடைக்கவும் பங்களிக்கும்.