தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டுப்புற கலைகளை மீட்க முயற்சி : 1000க்கும் மேற்பட்ட மகளிர் ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் ஆடி கண்கவர் விருந்து! - world record in salem

சேலத்தில் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக் ஒரே நேரத்தில் 1,250 பெண்கள் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் ஆடி கண்கவர் நடன விருந்து அளித்தனர்.

ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் ஆடி 1250 பெண்கள் சாதனை
ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் ஆடி 1250 பெண்கள் சாதனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 7:42 AM IST

ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் ஆடி 1250 பெண்கள் சாதனை

சேலம்:ஓமலூரில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், ஆயிரத்து 250 பெண்கள், பாரம்பரிய உடை அணிந்து ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் ஆடியது காண்போரை ரசிக்கச் செய்தது.

சங்க இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை, அனைத்தும் ஒரு வடிவத்திற்குள்ளும், இலக்கணத்திற்குள்ளும் நின்றே படைப்பாக்கப்படுகின்றன. ஆனால், மக்களின் வாழ்வியலில் இருந்து பிறந்து, மக்கள் வாழ்வோடு வாழ்ந்து, செழித்து வருகின்ற வாய்மொழி வழக்காறுகள் எனப்படும் ‘நாட்டுப்புறக் கலைகள்’ அனைத்தும் காலம் பல கடந்தும் நிலைத்து நிற்கின்றன.

அந்தவகையில், நாட்டுப்புறக் கலைகளை இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, பல்வேறு மாவட்டங்களில் கும்மியாட்டம், பல காலமாக கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இவை திருவிழா காலங்களில் கிராமப்புற பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க:தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட வழக்கு.. ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி!

இந்நிகழ்ச்சியில், ஆயிரத்து 250 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கலந்து கொண்டு ஒரே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்து இடைவிடாமல், தொடர்ந்து ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் நடனமாடி கண்களுக்கு விருந்து அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் மேள தாளம் முழங்க முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நடனமாடி வந்தனர்.

மேலும், நிகழ்ச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், "தமிழ் கலாசார சீரழிவுகள் பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் கொங்கு மக்களின் பாரம்பரிய கலை திறமையை வளர்த்தெடுக்க இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சேலம், ஓமலூரில் நடக்கும் இந்நிகழ்ச்சி 33 வது நிகழ்ச்சி ஆகும். அதனைத்தொடர்ந்து, வருகிற பிப்ரவரி மாதத்தில் கோவையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோவையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பத்தாயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு கும்மியாட்டம் நடனமாட உள்ளனர். மேலும், பாரம்பரிய கலைகளை போற்றி பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:அண்ணாமலையை நீக்க வேண்டும்..! அதிமுக போட்ட கண்டிஷன்..! பாஜகவின் ரியாக்‌ஷன் என்ன..?

ABOUT THE AUTHOR

...view details