கைவினை என்ற தொன்மையான கலையைப் பாதுகாப்பது மட்டுமன்றி கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் பல கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் கொலு பொம்மைகளின் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சியானது இன்று முதல் வரும் 12.10.2019 வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் அஷ்டலட்சுமி, தசாவதாரம், ராமர் செட், கல்யாண செட், கிருஷ்ணா லீலை, கொலு அலங்காரம் செட், கொலுப் படிகள், பரிசுப்பொருட்கள் மற்றும் கொலு அலங்கரிக்கத் தேவையான பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி போன்ற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த கொலு பொம்மைகளுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு 15 லட்ச ரூபாய்க்குக் கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 20 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.