தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் - கொளத்தூர் மணி கோரிக்கை! - Kolathur Mani

Periyar University VC: நிலைதடுமாறி நிற்கும் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பொறுப்புள்ள ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Kolathur Mani
கொளத்தூர் மணி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 3:39 PM IST

சேலம்: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கில், சாட்சியங்கள் கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதால், இதனை தடுக்க பொறுப்புள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளுக்காக துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் உள்பட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ளார். தனக்கு இதய வலி இருப்பதாகச் சொல்லி மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறார். இதன் உண்மை தன்மை அறிய ஒரு மருத்துவக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் நாள் பல்கலைக்கழகம் விடுமுறை முடிந்து திறக்கப்பட்டு விட்டது. ஆனால் துணைவேந்தர் பதிவாளர் யாரும் இல்லாமல், நிலைதடுமாறி நிற்கிறது பல்கலைக்கழகம்.

இன்னொரு பக்கம், பிணையில் இருக்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருப்பதாக நாம் அறிகிறோம். வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்குக்கு தொடர்பான ஆவணங்கள் பல்கலைக்கழகத்தில்தான் இருக்கின்றன.

இந்நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்குள் வரக்கூடாது, வழக்கின் ஆவணங்களை, சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது எனும் இயல்பான நிபந்தனைகள்கூட இல்லை. மாறாக அங்கு இருக்கின்ற பல்வேறு பதிவேடுகள் எடுக்கப்படுவதும், வைக்கப்படுவதுமான செயல்பாடுகள் நடக்கின்றன.

இதன் மூலம் சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கிறார் என்றுதான் பொருள். அவ்வாறாயின், புதிய நிபந்தனைகளை அறிவிக்க வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு பல்கலைக்கழகத்தில் எதுவும் நடைபெறாமல் ஸ்தம்பித்துள்ள நிலையில், அதற்கு ஏதேனும் ஒரு மாற்று ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.

நாம் பல முறை துணைவேந்தர் மீது விசாரணை நடத்துகிறபோது, ஒரு பொறுப்புள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து, அவர் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் இயங்குவற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் செய்துள்ள முறைகேடுகளை நிரூபிக்க முடியும் என வலியுறுத்தியுள்ளோம்.

இப்போது மீண்டும் அதே கோரிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், பதிவாளரும் இல்லாமல் இருக்கின்ற நிலையில், அவர்களுடைய முறைகேடுகளை விசாரிப்பதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பில் இயங்கச் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். இது குறித்து தமிழ்நாடு அரசும், உயர் கல்வித்துறையையும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:திருச்சியில் பிரதமரை மேடையில் வைத்துகொண்டு ஸ்டாலின் செய்த சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details