சேலம்: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனைத் தடுக்க வந்த காவலாளிகள் பலர் கொலை செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கார் ஓட்டுநர் கனகராஜ், விசாரணை வலையத்துக்குள் வருவதற்கு முன்பே மர்மமான முறையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கோவை சிபிசிஐடி கூடுதல் துணை ஆணையர் முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோடநாடு வழக்கின் முக்கிய தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சேலத்தில் பல்வேறு இடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்த கனகராஜின் சகோதரர் தனபால், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வீடியோ... பல்வேறு மொழிகளில் வெளியீடு!
அதில் அவர், கனகராஜ் தன்னிடம் ஐந்து பைகள் கொடுத்ததாகவும், அவரிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தர எடப்பாடி பழனிசாமி பேரம் பேசியதாகவும் தெரிவித்து இருந்தார். தொடர்ந்து விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி ஆஜராகி, பல்வேறு தகவல்களை தெரிவித்து வந்தார்.