சேலம்: சேலம் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நேற்று (அக்-02) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு, திமுகவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
அப்போது பேசிய அவர், “மக்களவைத் தேர்தலுக்கு நீங்கள் தயாராக வேண்டும். அதற்கு முன்பாக கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றிட வேண்டும். இதில் வெற்றி பெறுவதன் மூலம் விவசாயிகளுக்கு உதவ முடியும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. அவ்வாறு இல்லாமல், நாம் நேர்மையாக பணியாற்றிட வேண்டும். கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், நாடாளுமன்றத் தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம்” என தெரிவித்தார்.
இதனையடுத்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “சென்னை மாவட்டத்துக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பியுள்ளது. அதே போன்று, கோவையில் 168 எம்.எல்.டி. குடிநீருக்கான பில்லூர் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் பழுதுகளை அலுவலர்கள் உடனுக்குடன் சீரமைத்து வருகின்றனர். தமிழகத்தில் மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்பட்டு வருவதை அலுவலர்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.