பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து, சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளின் பட்டியலை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார். அதன் பேரில் வேளாண்துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், முறைகேடாக பயனாளிகள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், சிபிசிஐடி காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் முறைகேட்டில் ஈடுபட்டதாக 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ராஜா என்ற தற்காலிக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், தாரமங்கலத்தில் தனியார் கணினி மையம் மூலம் போலி ஆவணங்களைத் தயாரித்து, பயனாளிகளை பதிவு செய்த கலையரசன், ராகுல் ஆகிய இருவரையும் முதற்கட்டமாக துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். பெத்தநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை அலுவலகத்தில் பணியாற்றி வந்த உதவி அலுவலர் அன்பழகன் மற்றும் ஓட்டுநர் பிரகாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.