கிசான் நிதி உதவித் திட்ட மோசடி: சேலத்தில் மேலும் ஒருவர் கைது - சிபிசிஐடி காவல்துறையினர்
சேலம்: கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி செய்த மேலும் ஒருவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக மோசடி நடந்து இருப்பது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக சேலம் மாவட்டத்தில் மட்டும் பத்து ஆயிரத்து 700 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில், சேலம் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் மொத்தம் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த ராகுல், கலையரசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே சார்ந்த கலையரசன்(37) என்பவர் மூன்றாவது நபராக இன்று (செப்.10) கைது செய்யப்பட்டார். இவர் நங்கவள்ளி அடுத்த கோனூரில் கணினி சேவை மையம் நடத்தி வருகிறார்.
அந்த மையம் மூலமாக போலி ஆவணங்கள் தயாரித்து மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கலையரசனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை செய்தனர்.
பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெற்று கலையரசன் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான மூன்று பேரைக் தவிர மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட 48 பேரையும், காவல்துறையினர் கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.