கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திராவிலிருந்து மது பாட்டில்களைக் கடத்தி வந்து பலர் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள்
அந்த வகையில், கர்நாடகவிலிருந்து சேலம் வழியே பல்வேறு ஊர்களுக்கு மதுபாட்டில்கள் லாரிகள், கூரியர் லாரிகள் மூலம் கடத்தி வரப்படுவதாக சேலம் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சூரமங்கலம் உதவி ஆய்வாளர் நாகராஜன், கருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட காவலர்கள் இன்று (ஜூன்.04) அதிகாலை, கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6,722 மது பாட்டில்களைக் கடத்தி வந்த மூன்று வேன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இவைதவிர 3.2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.