மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள மிளகாய் பொதையைச் சேர்ந்த முருகேசன் (55) என்பவர் அப்பகுதியில் கூலி வேலை செய்துவந்தார். இவர் 2015ஆம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநிலம், கொள்ளேகால் அடுத்த ஹாலே கிராமத்திலிருந்தபோது கரும்பு வெட்டும் வேலை செய்த ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராஜம்மாள் (37), காசி மனைவி சிவம்மா (35) ஆகியோரிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் இரண்டு பேர் உள்பட ஐந்து பேரையும் கடந்த மே 12ஆம் தேதி முருகேசன் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக கொள்ளேகால் காவல் துறையினர் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் மேலும் மூவரைக் கொலை செய்தது தெரியவந்தது.
இவ்வழக்கு தொடர்பாக கர்நாடக நீதிமன்றம் முருகேசனுக்கு தூக்கு தண்டனை விதித்ததால் அவர் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்துவந்தார்.
கொள்ளேகாலில் கொலை செய்தவர் கொளத்தூரில் கைது இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கர்நாடக சிறையிலிருந்து தப்பிய முருகேசனை அவருடைய சொந்த ஊரில் வைத்து கொளத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கொளத்தூர் வந்த கர்நாடக சிறைச்சாலை ஐஜி ரேவண்ணா விசாரணை மேற்கொண்டு மீண்டும் அவரை பெல்காம் காவல் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
மேலும் கொளத்தூர் காவல் துறையினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்த ரேவண்ணா அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.