சேலம்:கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் சேலத்திலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 3000 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்து விட்டது. இதனையடுத்து தமிழகத்திற்குக் காவிரி நீர் திறக்க உத்தரவிட்ட காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவையும், தமிழ்நாடு அரசைக் கண்டித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 26ஆம் தேதி கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பெங்களூருவில் முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. சேலம், தருமபுரி கோட்டங்களிலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாகக் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நாள்தோறும் 250 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று முழு அடைப்பு காரணமாக நேற்று இரவு 10 மணி முதல் அரசு பேருந்துகள் பெங்களூர் செல்லாமல் தமிழக எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.